பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ஆக்கிரமிப்புக்களை. ஒரு பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனம் இன்னொரு பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக இடம்மாறும்போது சில வேளைகளில் அங்கு ஆக்கிரமிப்பு இனமாக மாறிவிடுகிறது. தொடக்கத்தில் யாழ் மாவட்டத்தில் கோப்பாயில் மட்டும் காணப்பட்ட இக்களை இன்று வடக்கு-கிழக்கெங்கும் எமது விவசாய நிலங்களை, தெருவோரங்களை, ஒரு பச்சை இராணுவம்போல ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. எமது விவசாய நிலங்களில் நிலைகொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தை வெளியேறக் கோருகின்ற நாம் எமது விவசாய நிலங்களை நிறைத்து நிற்கும் இந்தப் பச்சை இராணுவத்தையும் உடனடியாக விரட்டவேண்டியவர்களாக உள்ளோம் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.12.2013) காலை புத்தூர் நிலாவரையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பார்த்தீனியம் ஒழிப்புச் சிரமதானப் பணியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் அவர் உரை நிகழ்த்துகையில்,
சில தினங்களுக்கு முனனர் மரநடுகையில் ஈடுபட்ட நாம் இன்று அதற்கு மாறாக, பச்சைப்பசேல் என்று தழைத்து நிற்கும் பார்த்தீனியம் செடிகளை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். ஒன்றுக்கொன்று முரணான போதும் இந்த ஆக்கலும் அழித்தலும் அவசியமானவை. அவசரமானவை. முன்னைய மரநடுகை அரசின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் எமது இனத்தின் மறவர்களின் நினைவாக, எமது இனத்தின் மீள்எழுச்சியின் குறியீடாக, எமது சூழல் பாதுகாப்பின் ஓர் அங்கமாக மேற்கொள்ளப்படது. இந்தப் பார்த்தீனியம் ஒழிப்பும் பெரிதும் அதே நோக்கங்களுக்கானவைதான்.
வடக்கில் மாகாண அரசாங்கம் ஒன்று தாபிக்கப்பட்ட பின்னர் எமது மாகாணத்தைப் பல வழிகளிலும் கட்டியெழுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கும் நாம் எமது விவசாயப் பொருளாதாரத்தை மீள் எழுச்சிகொள்ள வைப்பதற்காகவும், எமது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்காகவும் இந்த அழிப்பு வேலையிலும் அவசரமாக ஈடுபடவேண்டியிருக்கிறது.
பார்த்தீனியம் எமது மண்ணுக்கு உரித்தான ஒரு இனமல்ல. வந்தேறு குடி. அன்னிய இனம். இந்தியப் படைகள் இங்கு வந்தபோது அவர்கள் எடுத்துவந்த செம்மறி ஆடுகளுடனும் இராணுவத் தளபாடங்களுடனும் சேர்ந்து வந்த ஒரு ஊடுருவல் இனம். இதனை, ஏதோ இந்தியா திட்டமிட்டு எடுத்து வந்த ஒன்றாக விளங்கிக்கொள்ளத் தேவை இல்லை. அவர்களுக்கும் அது அமெரிக்காவில் இருந்து இறக்குமதியான ஒன்றுதான். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான கோதுமைகளுடன் சேர்ந்து வந்த பார்த்தீனியம் இன்று அவர்களையும் பாடாய்ப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.
பார்த்தீனியம் எமது பயிர்களுக்குத் தேவையான தண்ணீர், கனியுப்புகள், சூரிய ஒளி, வாழிடம் போன்றவற்றை எல்லாம் அபகரித்து உற்பத்தியை வெகுவாகப் பாதித்துவருகிறது. கண்ணுக்குத் தெரியாமல் ஆண்டுதோறும் விவசாயப் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது. அது சுரக்கும் இரசாயனங்களால் எமக்கும் எமது கால்நடைகளுக்கும் ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்துவதோடு எமது மண்ணுக்கே உரித்தான சுதேசியத் தாவர இனங்களையும் சத்தமில்லாமல் அழித்துக்கொண்டிருக்கிறது. இதனால்தான் பார்த்தீனியத்தை ஒரு ஆக்கிரமிப்புக் களை என்கிறோம்.
மொத்தத்தில், பார்த்தீனியம் தன் பெயருக்கு ஏற்ப, எமது பாரை, அதாவது நிலத்தை மெல்ல மெல்லத் தனக்குத் தீனியாக்கிக்கொண்டிருக்கிறது. இதனை அழித்து ஒழிப்பதில் நாம் இனிமேலும் காலம் தாழ்த்தினால் விரைவிலேயே நமது விளைநிலம் முழுவதையும் அது விழுங்கிவிடும்.
இதனாலேயே, வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சு பார்த்தீனியம் ஒழிப்பின் முதற்கட்டமாக இந்த மார்கழி மாதத்தைப் பார்த்தீனியம் ஒழிப்பு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால், இது ஒரு மாதத்தில் செய்து முடிக்கக்கூடிய பணியல்ல. பார்த்தீனியத்தின் விதை நிலத்தின் கீழ் பல வருடங்கள் உறங்கு நிலையிலிருந்து மீளவும் முளைக்கக்கூடியது. அதே போன்று, பார்த்தீனியம் அங்கிங்கெனாதபடி பரவியிருக்கும் நிலையில் அதனை ஒழிப்பது விவசாயிகளால் மாத்திரம் தனித்து ஒப்பேற்றக் கூடியதுமல்ல. சகல தரப்பினரும் இணைந்து இதனை ஒரு தேசியக் கடமையாகக் கருதிச் சில வருடங்களுக்குத் தொடர்ச்சியாக முன்னெடுத்தாலே பார்த்தீனியத்தை ஒழிப்பது சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பார்த்தீனியச் செடிகள் அழிப்பினை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்