பாதுகாப்பற்ற மரப்பாலம் அச்சத்துடன் செல்லும் மக்கள்

மரங்கள் மற்றும் தடிகள் அடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட பாலத்தினூடாக நெடுங்கேணியிலிருந்து சேனைப்புலவு செல்லும் மக்கள் தினமும் உயிராபத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பழைய தபால் கந்தோர் வீதியில் அமைந்துள்ள பாலமே இந்த அச்ச நிலைக்கான முக்கிய காரணமாக உள்ளது. நீண்ட காலமாக இந்தப் பாலம் புனரமைக்கப்படாத நிலையில் மக்கள் தாமாகவே முன்வந்து மரங்களைக் கொண்டு “மரப்பாலம்’ அமைத்துள்ளனர்.

ஆனால் இது பாதுகாப்பானதாக இல்லாததால் மக்கள் தினமும் உயிராபத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் நெடுங்கேணியிலிருந்து சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்துக்குச் செல்லும் மாணவர்களும் இந்த வீதியையே பயன்படுத்தி வருவதால் உயிராபத்துக்களுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இந்த ஆரம்பப் பாடசாலையில் தரம் 5இக்கு உட்பட்ட மாணவர்களே கல்வி கற்று வருவதால் இவர்களின் பெற்றோர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இந்தப் பாலம் உள்ளதால் போக்குவரத்துச் சிரமங்களும் தோன்றியுள்ளன.

எனவே உயிர்களைக் காவு கொள்ளும் வரை அதிகாரிகள் காத்திருக்காது இந்தப் பாலத்தை உடனடியாகப் புனரமைத்து வழங்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.