பாடசாலை சென்ற மாணவர்களை மோதி விட்டு தப்பியோடிய பேருந்து!!

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பேருந்து ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.

குறித்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (24) காலை 7.00 மணியளவில் நீர்வேலி பூதவராயர் மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்ப பெண் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் தனது பிள்ளை உள்ளிட்ட இருவரை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளை , பருத்தித்துறை வீதி வழியாக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து (மினி வேன்) அவர்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் , அவர்களை பாடசாலைக்கு அழைத்து சென்ற குடும்ப பெண்ணும் காயங்களுக்கு உள்ளான நிலையில் , அங்கிருந்தவர்கள் மீட்டு கோப்பாய் வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

கோப்பாய் வைத்திய சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.