பாடசாலைகளிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தடை: ஆளுனர் உத்தரவு

வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்க வேண்டாமென வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமைய, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனால் மாகாணத்தின் சகல வலயக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

அச்சுற்று நிருபத்திற்கமைய வடமாகாண ஆளுனரின் பிரகாரம் வடமாகாண அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை அரசியல் கூட்டங்கள் மற்றும் கலந்தாய்வுகள் நடாத்துவதற்குப் பயன்படுத்த இடமளிக்கக் கூடாதெனவும் இவ் உத்தரவினை மீறும் பாடசாலை அதிபர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தல் தொனியில் சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த இவ் உத்தரவானது, பாடசாலை சமூகத்தினரிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது செயற்பாடுகள் குறித்து பெற்றுவரும் நன்மதிப்பினைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மேற்கொள்ளப்பட்ட ஒரு காழ்ப்புணர்ச்சியாகவே மக்கள் கருதுகின்றனர்.