பழைய தட்டச்சு பொறிகளைத் தேடுகிறது ரஷ்யா

ரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.

இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக நெருக்கமான நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் லட்சக் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டமையும், மிக அண்மையில், அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடன் அந்நாட்டின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியமையும் இதற்குக் காரணம் என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்கள் கணினி மூலமாகவே கசியவிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, அதிபர் புட்டீனுக்காக தயாரிக்கப்படும் சில முக்கிய அறிக்கைகள் டைப்ரைட்டர்கள் மூலமே எழுதப்பட்டுவருவதாகவும் இஸ்வேஸ்டியா நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.