பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்!!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளனர்.

வன்முறையை ஆதரித்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்வாக சேவைகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தருணத்தில் நாடு அராஜகமாகி விடுவதைத் தடுக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

இதேவேளை, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கமும் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற தன்மையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று முதல் முழு சுகாதார சேவையும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவையின் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தேசிய அமைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் அதிபர் சங்கங்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.