பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அந்த அமைப்பு கோரியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதத் தடைப் பிரிவிரினரால் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆரம்பத்தில் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மாணவர்கள் தற்போது புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி குறித்த மாணவர்களிடம் கடுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாணவர்கள் மூன்று மாத காலத்திற்கு தடுத்து வைக்கப்பட உள்ளதாகவும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அடிப்படை உரிமைகளை குற்றச் செயல்களாக அரசாங்கம் அடையாளப்படுத்தக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது.