பல்கலை மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி, உயர்க் கல்வி அமைச்சர்க்கு டக்ளஸ் கடிதம்

KN-daklasசப்பிரகமுவா பல்கலைக்கழகத்தில் முகமாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உயர்க் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க ஆகியோரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைக்கழக வளாகத்துக்குள் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்துவது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தியுள்ளது. சப்பிரகமுவா பல்கலைக்கழகத்தில் கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் எனும் முதலாம் ஆண்டு மாணவன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இனந்தெரியாதவர்கள் என்று கூறப்படுகின்ற இருவரினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் அனைத்து இலங்கை மக்களினதும் ஐக்கியத்துக்காக பாடுபடும் எமது முயற்சிகளை கேள்விக்குட்படுத்தும். எனவே இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அவர்கள் விஷேட செயற்திட்டத்தினைத் தயாரித்து ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளேன்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உடனடியாக செயற்படுகின்றபோதே பாதுகாப்பான சூழலில் எமது மாணவச் செல்வங்கள் தமது கல்வியை தொடர முடியும்.
தூரப் பகுதிகளிலிருந்து உயர் கல்வியைத் தொடர்வதற்காக பல்கலைக்கழகங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர், இவ்வாறான தாக்குதல்களால் மிகுந்த வேதனையும் பதற்றமும் அடைந்துள்ளனர்.

எனவே, பல்கலைக்கழகங்களுக்குள் நடைபெறும் இவ்வாறான அநாகரிகமான தாக்குதல்கள், மாணவர்களின் கல்வியையும் இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தையும் பாதிக்கச் செய்துவிடும். எனவே சப்பிரகமுவ பல்கலையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்படுவதோடு உரிய தண்டனையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வெளி இடங்களில் இருந்து வருகை தந்து கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தை அகற்ற வேண்டும் எனும் கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் விடுத்துள்ளேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் மீது தாக்குதல்

Recommended For You

About the Author: Editor