கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
நாளை மறுதினம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை இயல்பாக தொடர்வர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் படையினர் அத்து மீறி உள்நுழைந்த சம்பவத்தைக் கண்டித்து மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அமைதி ஊர்வலத்தையும் நடத்தினர்.
அதன் போது இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதை அடுத்து மாணவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் தமது கல்விச் செயற்பாடுகளைப் புறக்கணித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இதன்படி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் எஸ்.சொலமன் ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மாணவர்களை விடுதலை செய்யக்கோரி அனைத்துப் பீட மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கைதான மாணவர்களில் இருவர் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய இரு மாணவர்களும் தொடர்ந்தும் புனர் வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்பட்டதால் நாளை மறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் கல்விச் செயற்பாடுகளில் நாம் முழுமையாகப் பங்கேற்போம் என்று மாணவர் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.