Ad Widget

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா, சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்.
கொழும்பு ஹைட்பார்க்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ‘அரச பல்கலைக்கழக முறைமையை பாதுகாப்போம்’, உலக தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களா அல்லது துதிபாடும் பயிற்சிநிலையங்களா?’, பல்கலைக்கழக சுயாதீனத்திற்கும் கல்வியியல் சுதந்திரத்திற்கும் மதிப்பளி’, பல்கலைக்கழகங்களை இராணுவமயப்படுத்துவதை நிறுத்து, எமது நாட்டிற்கான எதிர்காலத்தை நாம் கோருகிறோம்’ ஆகிய சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதியான கலாநிதி பிரபாத் ஜயசிங்க உரையாற்றகையில், “அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் மருத்துவ பீடங்கள் மூடப்பட மாட்டாது என உயர்கல்விஅமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க உறுதியளித்திருந்தார். ஆனாலும் அரசாங்கத்தின் இந்த வாக்குறுதியில் மருத்துவபீடங்களும் நம்பிக்கையிழந்துள்ளன.  தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியமைக்கு அதிருப்தி தெரிவித்து கொழும்பு மருத்துவபீடம் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள பகிஷ்கரிப்பொன்றை நடத்தவுள்ளது” என்றார்.

மாதுலுவாவே சோபித தேரர் உரையாற்றுகையில், இஸட் புள்ளி விவகாரம், பரீட்சை வினாத்தாள்களில் உள்ள தவறுகள், பல்கலைக்கழகங்களை அரசியல்மயமாக்கல் ஆகியன பல்கலைக்கழகங்களை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினைகள் அல்ல எனவும் அவை நாடு முழுவதையும் பாதிக்கும் பிரச்சினைகள் எனவும் கூறினார்.

“இந்த பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு இரு மாதங்களாக கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை இப்போது நாம் தீர்க்காவிட்டால் எதிர்வரும் வருடங்களில் இளைஞர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினையை இந்த தொழிற்சங்க நடவடிக்கை பிரதிபலிக்கிறது.

இவை நியாயபூர்வமான கோரிக்கைகளாகும். பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 1.83 சதவீதம் மாத்திரமே ஒதுக்கப்படுகிறது. ஐந்து வருடகாலம் சேவையாற்றிய பின்னர் விரிவுரையாளர்கள் வெளிநாடு செல்வதால் இங்கு தொடர்ந்திருக்காத நிலை காணப்படுகிறது. எப்போது நாம் இந்த பிரச்சினையை தீர்க்கப்போகிறோம்?’ என மாதுலுவாவே சோபித தேரர் கேள்வி எழுப்பினார்.

இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் பாலா தம்பு உரையாற்றுகையில், “பெரும்பாலான தொழிலாளர்கள் தமது வருமானத்தில் பெரும்பகுதியை தமது பிள்ளைகளின் கல்விக்காக செலவிடுகின்றனர். தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு அதுவே சிறந்த வழி என அவர்கள் கருதுவதே இதற்கான காரணமாகும். அரசாங்கம் கல்விக்கு குறைந்தளவே செலவிடுவது, இந்நாட்டின் இளைஞர்களுக்கு குறைந்த வாய்ப்புகளே இருப்பதை வெளிப்படுத்துகிறது” என்றார். தனது அயல் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையானது கல்விக்கு குறைந்தளவே செலவிடுகிறது என அவர் கூறினார்.

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உரையாற்றுகையில், கல்வித்துறையும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், கல்வித்துறை பிரச்சினைகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றார்.

‘உயர்தர பரீட்சைகளில் தவறுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. 1000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யப்போவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையிலும், இரு தவணைக்காலங்கள் முடிந்துவிட்டபோதிலும் பெற்றோர்கள் பலர் தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க முடியாமல் உள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக நாம் சதி செய்வதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், இவை உண்மையான பிரச்சினைகளாகும்’ எனவும் அவர் கூறினார்.

இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க உரையாற்றுகையில், ‘கல்வித்துறைக்கான அரசாங்கத்தின் நிதியொதுக்கீடு இந்தியாவில் 3 சதவீதத்துக்கு அதிகமாகவும் நேபாளத்தில் 3.9  சதவீதமாகவும் பங்களாதேஷில் 2 சதவீதத்திற்கு அதிகமாகவும் உள்ளது என்றார். இது முக்கியமான பிரச்சினையாகும். எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை  நிறுத்துவதற்கு செல்வாக்கு செலுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்க மாட்டோம்’ என்றார்.

Related Posts