பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா?

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு அரசு 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது.

பிராந்திய விமான நிலையங்களுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கான விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கான முதல் நடவடிக்கையாகவே, விமான ஓடுபாதையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
வடக்கு அபிவிருத்தி அமைச்சு, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவுள்ளது.

போர்க்காலத்தில் இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பலாலி விமான நிலையத்தை, இந்தியாவின் நகரங்களுக்கான பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம், சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.

இந்த விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு கூட்டு அரசு பதவியில் இருந்த போது இந்தியா உதவ முன்வந்தது. எனினும், இதுதொடர்பான இணக்கப்பாடுகள் எட்டப்படாமல் இழுபறி நிலை காணப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, ஓடுபாதையை அபிவிருத்தி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

பின்னர், பிராந்திய விமான நிலையங்களுக்கான சேவைகளை நடத்தும் வகையில், சர்வதேச விமான நிலையமாக அதனை அபிவிருத்தி செய்வதற்கான உதவியை இந்தியாவிடம் கோருவதற்கும் கொழும்பு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor