பலாலி விமான நிலையப் பணியும் பறிபோகும் நிலையில்..! இந்தியாவை ஓரம்கட்டும் இலங்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்தியா உதவ முன்வந்தது.மேலதிகமாக பலாலி விமான நிலையத்தை நவீன மயப்படுத்த உதவுவதாகவும் இந்தியா உறுதியளித்திருந்தது.

ஆனால் அதற்கான உடன்பாடு எதுவும் கையெழுத்திடப்படவில்லை.

இந்த நிலையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் முடிவை இலங்கை அரசாங்கம் கைவிட்டுள்ளதாகவும், இந்தியாவின் உதவியின்றி அதை அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையின் குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கார ஜெயரட்ண இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

“பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சே மேற்கொள்ளவுள்ளது.

இது வணிக மற்றும் இலங்கை விமானப்படையின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

நாங்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து இந்த விமான நிலையத்தை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.“ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலையே இலங்கை அரசின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இது இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றி இலங்கை அரசுடன் கடும்தொனியில் பேச இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webadmin