பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் 19 இலாபத்தில் மிகுதி 5 நட்டத்தில்

co-opயாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 19 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இலாபம் ஈட்டியுள்ளன. மிகுதி 5 சங்கங்களும் பெரும் நட்டத்தில் இயங்கியுள்ளன.

யாழ்.மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி.கே.அருந்தவநாதன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டில் சங்கங்களின் மொத்த வியாபார புள்ளி விவரங்களின் படி நீர்வேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் முன்னணியில் உள்ளது. அத்துடன் இந்தச் சங்கத்தின் வியாபார நடவடிக்கையும் திருப்திகரமாக உள்ளது.

இரண்டாவது இடத்தில் கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமும், மூன்றாவது இடத்தில் அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமும், நான்காவது இடத்தில் யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமும் மொத்த வியாபார நடவடிக்கையில் முன்னணியில் உள்ளன.

அதே வேளை சுன்னாகம், வேலணை, மருதங்கேணி, காரைநகர், கைதடி ஆகிய ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ந்தும் பெரும் நட்டத்தில் செயற்பட்டுள்ளன.

குறிப்பாகச் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் போதிய வியாபார நடவடிக்கைகள் இல்லாமல் தொடர்ச்சியாகவே நட்டத்தில் செயற்பட்டு வருகின்றது எனப் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குடாநாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் தற்போது வியாபார நடவடிக்கையில் ஓரளவு முன்னேறிக் காணப்படுகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டில் மொத்தம் பதினாறு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இலாபத்தில் செயற்பட்டன. சங்கங்களின் வியாபார நடவடிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பணியாளர்கள் ஊக்கமுடன் செயற்பட வேண்டும்.

சங்கங்களின் கிளை நிலையங்களை நேர காலத்துடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக நட்டத்தில் செயற்பட்ட ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களையும் இலாபமீட்டும் வகையில் செயற்பட வைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.