Ad Widget

பரவிபாஞ்சான் மக்கள் ஆறாவது நாளாகவும் போராட்டம்

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமது காணிகளை விடுவிக்க கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், கடந்த 17 ஆம் திகதி கைவிடப்பட்டிருந்து.

குறித்த காணியை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இரா. சம்பந்தன் அப்போது வாக்குறுதியளித்திருந்தார்.

எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வாக்குறுதியளித்தவாறு 14 நாட்கள் கால அவகாசத்திற்குள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை, தமது பிரச்சினை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாராமுகமாக இருப்பது தொடர்பில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த 31 ஆம் திகதி மீண்டும், கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் இன்று மக்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் கலந்துரையாடியுள்ளார்.

பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்றரை ஏக்கர் வரையான பொதுமக்களின் காணியை கடந்த 31 ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

எனினும் அந்த காணியும் இதுவரை பொதுமக்களிடம் கையளிக்கப்படாத நிலையில் எஞ்சிய பொதுமக்களின் காணியையும் விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த 31 ஆம் திகதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts