இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்,
போர் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்ற போதும், பயங்கரவாத தடை சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமை குறித்து தனது அதிருப்தி வெளியிட்டார்.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ராஜதுரை உரையாற்றுகையில்,
இங்கு இந்த புதிய சட்டமூலமானது மக்களுக்கு பாரிய நிம்மதியை அளிக்கும் என தாம் நம்புவதாகவும் அத்துடன் இந்த அரசாங்கம் மக்களுக்கு நலம் பயக்கும் பல நல்ல சட்டங்களை உருவாக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் கடமையெனவும் அவர் குறிப்பிட்டார்.