Ad Widget

பனைப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தால் நாம் யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை – பொ.ஐங்கரநேசன்

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு, அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்துக்கு இயற்கை அளித்த மிகப்பெரும் கொடை பனைவளம். அந்தப் பனைமரங்களை ஆதாரமாகக் கொண்டு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தால் நாம் யாரிலும் தங்கி வாழவோ அல்லது யாருக்கும் அடிபணிந்து வாழவோ வேண்டிய அவசியம் இல்லை என்று விவசாய அமைச்சர் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

IMG_9937 copy

கொழும்பு வெள்ளவத்தை றோட்டரக்ற் கழகம் முன்னெடுத்துள்ள இலங்கையில் ஒரு இலட்சம் பனைமரக் கன்றுகளை நடும் திட்டத்தின் தொடக்க வைபவம் கடந்த வெள்ளிக் கிழமை (18.10.2013) சிறுப்பிட்டியில் இடம்பெற்றது. இந் நிகழ்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொ.ஐங்கரநேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பனைமரங்கள் இலங்கையில் தமிழர்தாயகமான வடக்குக்கிழக்கிலேயே பெருவாரியாகக் காணப்படுகின்றன. இங்கு ஏறத்தாழ 11 மில்லியன் பனைமரங்கள் உள்ளன. இவற்றில் 9.5 மில்லியன் பனைமரங்கள் வடமாகாணத்தில் வளர்ந்துள்ளன. உலகில் அதிக அளவு பனைமரங்கள் இந்தியாவிலே உள்ளது. அங்கும் 50 விழுக்காடுக்கும் அதிகமான பனைமரங்கள் தமிழ்நாட்டிலேயே காணப்படுகின்றன. அந்த வகையில் பனைமரம் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளம். வரண்ட வலயமான எமது பிரதேசத்தில் பெருங்காடுகள் இல்லாத குறையைப் போக்குபவையும் இந்தப் பனங்கூடல்கள்தான். ஆனால், சூழலியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த இந்தப் பனைவளத்தின் பயனை நாம் இன்னும் முழுமையாக உணர்ந்துகொள்ளாது இருக்கிறோம்.

எல்லா நாடுகளும் தங்களது இயற்கைத் தாவர வர்க்கத்தை அடிப்படையாகக்கொண்டே தமது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்றன. ஆனால் நாம் பனைமரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குரிய மரமாக ஒதுக்கி வைத்துள்ளோம். உலகில் ஒரு மரத்தை ஒரு சமூகத்துக்குரிய மரமாக ஒதுக்கிய சிறுமை அநேகமாக தமிழர்களையே சாரும். இதனால் கற்பகதருக்களான பனைமரங்களின் பொருளாதாரப் பயனை இன்னும் நாம் குறைந்தபட்ச அளவிலேனும் அறுவடைசெய்யவில்லை. இந்நிலை மாற்றப்படவேண்டும். பனைப்பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும்முகமாக அது தொடர்பான கல்வியையும், நவீன தொழில் நுட்பங்களுடன்கூடிய தொழில் முறைமைகளையும் அறிமுகப்படுத்தவேண்டும். சமூகவேறுபாடுகள் அற்று எல்லோரும் இத்துறையில் ஈடுபடக்கூடிய நிலை உருவாக்கப்படவேண்டும்.

போரில் அதிகம் பாதிக்கப்பட்ட தாவரம் பனைவளம்தான். பதுங்கு குழிகளையும், காப்பரண்களையும் அமைப்பதற்கு வெட்டி வீழ்த்தியதாலும், எறிகணை வீச்சுகளாலும் ஏறத்தாழ 4.5 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதும் பனை அழிப்புத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் அரச தரப்பினரின் ஆதரவோடு புதுக்குடியிருப்பில் மரக்காலை அமைப்பதற்காக 250 பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. இயற்கையிலேயே பனை எவரது கவனிப்பும் அற்று வளரக்கூடியதாக இருந்தபோதும் அது முளைதிறன் குறைந்ததொரு மரமாகும். நூறு பனைவிதைகள் நட்டால் அவற்றில் 35 விதைகளே முளைக்கின்றன. இதனால் இவ்வாறான பனைமர நடுகைத் திட்டங்களின் மூலமே இழந்த பனைவளத்தை நாம் ஈடுசெய்யமுடியும். வீதியோரங்களிலும் அரச காணிகளிலும் மாத்திரம் அல்லாது தரிசாக விடப்பட்டிருக்கும் தனியார் காணிகளிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் வலி.கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார், பனை அபிவிருத்தி சபைத் தலைவர் ப.சீவரத்தினம், றோட்டரக்ற் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு பனம் நாற்றுகளை நாட்டிவைத்தனர். இதன்போது நடப்பட்ட ஆயிரம் பனை நாற்றுகளையும் பராமரிக்கும் பொறுப்பை வலி.கிழக்குப் பிரதேச சபை ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

IMG_9945 copy

IMG_9952 copy

IMG_9960 copy

IMG_9961 copy

IMG_9972 copy

Related Posts