பத்தொன்பது பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடத்தைக் கற்பிக்க ஏற்பாடு. மாணவர் அனுமதி கோருகின்றது கல்வித் திணைக்களம்.

ICT-class-computerவடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலுள்ள 19 பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழில்நுட்பவியல் பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இப் பாடங்கள் 18 பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமும் ஒரு பாடசாலையில் சிங்கள மொழி மூலமும் கற்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் வேலணை மத்திய கல்லூரி, வசாவிளான் மகா வித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரி, யாழ். இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை, சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆகிய 10 பாடசாலைகளில் தொழில்நுட்பப் பாடம் கற்பிக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி . இந்துக்கல்லூரி, கிளி. மத்திய கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி, ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், முருங்கன் மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் வவுனியா மாவட்டத்தில் மடுக்கந்தை தேசிய பாடசாலையில் சிங்கள மொழி மூலமும் கற்பிக்கப்படவுள்ளது. இதேபோல் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், செட்டிகுளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் தொழில்நுட்பவியல் பாடம் கற்பிக்கப்படவுள்ளது. இப் பாடத்தைக் கற்பதற்கு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் மூன்று திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்தவர்கள் இணைந்து கொள்ளலாம். கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சாதாரண சித்தி பெற்றிருக்கவேண்டும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் வ .செல்வராசா அறிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்து வேறு துறைகளில் உயர்தரம் பயிலும் மாணவர்களும் விருப்பத்திற்கு ஏற்ப தொழில் நுட்பவியல் பிரிவில் இணைந்து கல்வி கற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் பாடத்துறையில் சித்தியடைபவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரி அனுமதியில் மேலதிக வாய்ப்புக்கள் இருப்பதோடு தொழில்துறை வாய்ப்புக்களும் வசதி செய்யப்படவுள்ளன. க.பொ.த. உயர் தரம் தொழில்நுட்பவியல் பாடத்துறையில் சித்திபெறும் மாணவர்களுக்கு தேசிய தொழிற் தகமைச் சான்றிதழ் ( என்.வி. கியூ ) சான்றிதழ் வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.