பண்ணை ஊடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமாகும் நிலை

இன்னும் சில மாதங்களில் பண்ணை ஊடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடையலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறிகாட்டுவான் வேலணை ஊடான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாலத்தின் ஒரு பகுதி கடல்நீர்பட்டு முற்றாக உக்கி சேதமடைந்துள்ளது. உக்கிய பகுதி தினமும் இடம்பெறும் போக்குவரத்தால் சிதைந்து வருகின்றது. இந்த வீதி, பாலம் சிதைவு குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை, இப்பாலம் ஊடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைவதற்கு முன்னர் அராலி வேலணை ஊடாக கடற்பாதையை புனரமைக்குமாறு வேலணை பிரதேச செயலர் திருமதி சதீசன் மஞ்சுளாதேவி, வேலணை பிரதேச சபைத் தலைவர் சி.சிவராசா ஆகியோர் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இரண்டு கூட்டங்களிலும் தெரிவித்திருந்தனர்.

பண்ணை ஊடாக போக்குவரத்துப் பாலம் சிதைவடைந்து போக்குவரத்து ஸ்தம்பிக்க முன்னர் அராலி வேலணை கடற்பாதை புனரமைக்கப்பட்டால் மாற்றுப் பாதை ஊடான சேவை தீவகத்தையும் வலிகாமத்தையும் இணைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 2012 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் அராலி வேலணை பாதை புனரமைப்பு குறித்தான இறுதி முடிவும், நிதி ஒதுக்கீடு குறித்தும் முடிவாகவில்லை என்று தெரியவருகிறது.