Ad Widget

பட்ஜெட் தொடர்பில் ஜனாதிபதி – முதலமைச்சர்கள் பேச்சு! விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சின் செயலாளர் மற்றும் 7 மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமித் தசநாயக்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத், தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரட்ன ஆகியோரே இதில் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரியவிடம் வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

“மாகாண சபைகளுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினோம். அத்துடன், மாகாண சபைகளுக்கான நிதி நேரடியாக ஒதுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினோம். இதற்கு ஜனாதிபதி உடனடித் தீர்வை வழங்கினார். மீண்டும் நிதியமைச்சின் ஊடாக நேரடியாக மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதிலுள்ள மேலதிக பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 2017 வரவு – செலவுத்திட்டத்தில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக இதன்போது ஜனாதிபதி உறுதியளித்தார்” – என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்காமை தொடர்பில் மேல் மாகாண முதலமைச்சரிடம் வினவியபோது,

“9 மாகாண முதலமைச்சர்களும் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அதற்கமையவே நாங்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம். வடக்கு முதல்வருக்கு இன்றைய தினம் (நேற்று) சபை கூடுகின்றமையால் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்தார். எனினும், பங்குபற்றுவதற்காக இரு முதல்வர்களும் தமது பிரதிநிதிகளை அனுப்பியிருந்தனர்” – என்றார்.

இந்தக் கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறும் என்று நேற்றுமுன்தினம் மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும், நேற்றுக் காலை மேல் மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அது மாற்றப்பட்டிருந்தது. அதற்கமைய முதலமைச்சர்கள் 7 பேரும் நேற்றுக் காலை அங்கு கூடியிருந்தனர். அங்கு ஜனாதிபதி சமுகமளிக்கவில்லை. பின்னர் ஜனாதிபதி செயலகத்துக்கு இவர்கள் அழைக்கப்பட்டு பேச்சு நடத்தப்பட்டது.

Related Posts