Ad Widget

படை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த பிரிட்டன் உறுதியோடு செயற்படும் – பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும், படைகளின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் பிரிட்டன் உறுதியாகவுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் நேற்று யாழில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.

David_Cameron

யாழ்ப்பாணத்துக்கு நேற்று பயணம் செய்த பிரிட்டன் பிரதமர், யாழ். பொதுநூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போதே இராணுவ மயமாக்கலே வடக்கில் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் தமிழ் மக்களின் சொந்த நிலங்கள் படைகளினால் அபகரிக்கப்படுகின்றன, வீடுகள் இடித்தழிக்கப்படுகின்றன, இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறாமல் உள்ளனர். தமிழரின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் படையினர் ஈடுபடுகின்றனர். பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

அதேவேளை, இராணுவத்தினரின் குடும்பங்கள் மற்றும் சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்தி வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்க அரசு திரைமறைவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது – என்று பிரிட்டன் பிரதமரிடம் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

அத்தோடு வடமாகாண சபையில் முன்னாள் இராணுவ அதிகாரி ஆளுநராக இருப்பதால் அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கின்றார். மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அவர் மதிப்பளிப்பதில்லை.

இவரின் இத்தகைய செயற்பாடுகள் மாகாண சபையின் அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பதற்கு ஏதுவாகிவிடும்.

எனவே, இவரே உடனடியாகப் பதவி நீக்கம் செய்து சிவில் சமூகத்தினரின் பிரச்சினையை உணர்ந்து பணியாற்றக்கூடிய ஒருவரை ஆளுநராக உடனடியாக நியமிக்குமாறு நாம் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் நிலையான – நிரந்தர அரசியல் தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தத் தீர்வு அனைவரும் ஏற்றுக்கொள்ளகூடிய சமஷ்டி அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும் – என்றும் கூட்டமைப்பினர் தெவித்தனர்.

இதனைக் கேட்டறிந்தபின் கருத்துத் தெரிவித்த பிரிட்டன் பிரதமர்,

வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும், படைகளின் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும் என்பதிலும் பிரிட்டன் உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமேயில்லை. சர்வதேச சமூகமும் இதனையே விரும்புகின்றது.

அதேவேளை, வடக்கில் தமிழ் மக்கள் எந்தவித அச்சுறுத்தல்களுமின்றி சுதந்திரமாக வாழவேண்டும். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை இந்நாட்டு அரசு உடன் நிறுத்தவேண்டும்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மஹிந்த ராஜபக்ஷ அரசால் வலுக்கட்டாயமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து இலங்கையின் நீதித்துறை செயலிழந்து விட்டது. எனவே, சர்வதேச அழுத்தங்கள் ஊடாகத்தான் இலங்கையில் எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வைக் காணலாம்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பில் நீதியான – பக்கச்சார்பற்ற – சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகள் உடன் நடத்தப்படவேண்டும். இல்லையயனில் சர்வதேச விசாரணையை பிரிட்டன் வலியுறுத்தும்.

இலங்கை தொடர்பான எனது நிலைப்பாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நான் நேரடியாகத் தெரிவிக்கவுள்ளேன் என மேலும் அவர் கூறினார்.

Related Posts