யாழ்.மாவட்டத்தில் இராணுவம் அவசியமற்றது என்று கூறும் அரசியல்வாதிகள் வறிய மக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள் நாங்கள் இரண்டாயிரம் வீடுகள் வரையில் மக்களுக்கு நிர்மாணித்து வழங்கியுள்ளோம். இவ்வாறு யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கேள்வி யெழுப்பினார்.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஜே/279 கிராம சேவகர் பிரிவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பமொன்றுக்கு இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது.
3 ஆவது பிரிவு விஜயபாகு காலாட்படையினரால் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது . இரண்டரை லட்சம் ரூபாய்வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்ட போதும் இராணுவத்தின் உழைப்பின் மூலம், இராணுவமுகாமிலிருந்த பொருள்களையும் பயன்படுத்தி 75 ஆயிரம் ரூபா செலவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது .
இந்த வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற் றது. இதில் கோப்பாய் பிரதேச செயலர் ம. பிரதீபன் மற்றும் அந்தப் பகுதி கிராம சேவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீட்டைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;
தற்போதைய கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவும் அமைதியை விரும்பாதவர்கள், நாங்கள் மேற்கொள்ளும் இவ்வாறான முயற்சிகளை விரும்பாத அரசியல் தரப்பினர் யாழ். மாவட்டத்தில் இராணுவம் அவசியமில்லை என்று கூறுகின்றனர்.
இங்கு அதிகரித்த இராணுவப்பிரசன்னம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன் இராணுவத்தினரால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், அன்றாட வாழ்க்கை பாதிப்படைவதாகவும் இந்த அரசியல் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
நான் அவர்களுக்கு கூறக் கூடிய பதில், இங்குள்ள எமது இராணுவத்தினர் மக்களுக்கு சிறந்த சேவையையும், நன்மை பயக்கும் காரியங்களையுமே செய்கிறார்கள் என்பதுதான்.
நாங்கள் இதுவரையில் இரண்டாயிரம் வீடுகள் வரையில் அமைத்துக் கொடுத்துள்ளோம். இராணுவத்தினர் இங்கு அவசியமில்லை என்று குறைகூறும் அரசியல் கட்சியினர் வறியமக்களுக்கு ஏதாவது உதவி செய்துள்ளனரா?
இத்தகைய பலதரப்பட்ட கருத்துக்களை கணக்கில் எடுக்காது , பொது மக்களது தேவை குறித்து கவனம் செலுத்தி அவர்களுக்குரிய தேவைகளை அறிந்து அவற்றை நிறை வேற்றிக் கொடுக்க இராணுவத்தினர் எந்த வேளையிலும் தயாராக இருப்பார்கள் என்றார்.