படைத்தரப்பினர் மக்களுக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்க முடியாது – கட்டளைத்தளபதி

மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அதன் நடவடிக்கையாகவே 200 க்கு மேற்பட்ட காவலரண்களும், 30 க்கு மேற்பட்ட இராணுவ விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி உதயபெரேரா தெரிவித்தார்.

EPDP-army

இன்று ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், கட்டளைத்தளபதிக்குமிடையிலான சந்திப்பு பலாலி கூட்டுப்படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்டளைத்தளபதியுடனான சந்திப்பில் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டதாகவும். இதில் மக்களுக்கு உரிமையான வாழ்விடங்களை மீள ஒப்படைப்பதில் தாம் கூடிய அக்கறை கொண்டிருப்பதாகவும், அதிலும் வலிகாமம் வடக்குப் பகுதியிலுள்ள பல கிராமங்களை மக்களிடம் மீளக் கையளிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுவதாகவும், வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் வளலாய் கிராம சேவர் பிரிவினை முழுமையாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலும் இராணுவத்தினரால் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளை மலிவு விலையில் விற்பதனால் யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பாதிப்படைவதாக கட்டளைத்தளபதிக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு கருத்து தெரிவித்த கட்டளைத்தளபதி அதுதொடர்பாக ஆராய்ந்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இச்சந்திப்பில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி. குகேந்திரன் (வி.கே.ஜெகன்), வலிகாமம் கிழக்கு பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரும் கோப்பாய் பிரதேச இணைப்பாளருமான இ.ஐங்கரன், வலிகாமம் மேற்கு பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரும் வட்டுக்கோட்டை இணைப்பாளருமான சி.பாலகிருஸ்ணன் (ஜீவன்), சாவகச்சேரி நகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் தென்மராட்சி இணைப்பாளருமாகிய சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்), பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரும் வடமராட்சி இணைப்பாளருமாகிய ஐயாத்துரை சிறி ரங்கேஸ்வரன் (ரங்கன்) ஆகியோர் கலந்து கொண்டனர்.