பங்குத்தந்தை தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

யாழ். பொதுநூலகத்திற்கு முன்பாக பங்குத்தந்தை தாக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் உரும்பிராய் சென்மைக்கல் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி செபமாலை வழிபாட்டில் நேற்றய தினம் ஈடுபட்டனர்.

arppaddam-ilavalai

யாழ்ப்பாணம் வருகை தந்த பிரித்தானிய பிரதமரின் கவனத்தினை ஈர்ப்பதற்காக யாழ்.பொதுநூலகத்திற்குமுன்பாக காணாமற்போனோரின் உறவுகள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தை உள்ளிட்டவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை கடந்தவெள்ளிக்கிழமை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் பொலிஸாரின் தடுப்புக்களை உடைத்து நூலக முன்வாயிலுக்கு செல்ல முற்பட்டவர்களை பொலிஸார் தாக்கினர். இதில் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தை ஆகியோர் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைக் கண்டித்தே மேற்படி கண்டன வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழிபாட்டில் 150 மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ‘எமக்கு நீதி வேண்டும், எங்கள் குருவே எமக்கு பாதுகாப்பு வேண்டும், பங்குத்தந்தை தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்’ போன்ற சுலோகங்களை தாங்கியவாறு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.