பகிடிவதையால் கல்வியை இழந்த மாணவனுக்கு மீளவும் கல்வியைத் தொடர அனுமதிக்குமாறு கோரிக்கை

யாழ். பல்கலையில் பகிடிவதைக்குட்பட்டு கல்வியை இழந்துள்ள மாணவன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அம் மாணவனை மீண்டும் கல்வி நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் ஆகியவற்றிடம் வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் கிளிநொச்சியை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவனான மங்களதேவன் ஜெயக்குமார் என்பவர் பகிடிவதை எனும் பெயரில் துன்புறுத்தப்பட்டமையால், அவர் தனது கல்வி நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு அவருடைய தகப்பனாருடன் தோட்ட வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுவுக்கு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்றய தினம் இடம்பெற்ற மாகாண சபையின் கூட்டத் தொடரில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எனினும் இந்த விடயம் ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் அவமதிக்கும் செயலாகும் என உறுப்பினர்களான அஸ்மின், சயந்தன், மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் கூறி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உண்மை சம்பவம் குறித்து ஆராய்ந்த பின்னரே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டு எனவும் கோரினார்கள்.

எனினும் இது ஒரு பிரேரணை அல்ல. சாதரணமாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோருவதாகவே உள்ளது. மேலும் கூலித் தொழிலாளியின் மகனுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது தெரியாமல் இருக்கலாம்.

எனவே, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகத்திடமும், ஆசிரியர் சங்கத்திடமும் முன்வைப்பதில் தவறில்லை என எதிர்க்கட்சி தலைவர் தவராசா, அவைத்தலைவர் சிவஞானம், உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோர் தெளிவுபடுத்தியதை அடுத்து குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி

யாழ் பல்கலைக்கழக ராக்கிங் கொடுமையால் கல்வியை இடைநிறுத்திய மாணவன்!!

Recommended For You

About the Author: Editor