நேற்று திறக்கப்படாத இறங்குதுறை அடுத்த மாதம் திறக்கப்படும்; நீரியல் வளத்துறைப் பணிப்பாளர்

postponed_stamp-eventபாசையூர் புதிய இறங்குதுறை எதிர்வரும் மாதம் திறக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பாசையூரில் அமைக்கப்பட்ட புதிய இறங்குதுறை நேற்று திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டு எதிர்வரும் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்விற்கு பொருளாதார அமைச்சர் மற்றும் வடமாகாணத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

எனினும் நேற்று மடுவுக்கான புகையிரத சேவைகள் ஆரம்பித்து வைக்கப்படும் நிகழ்வு இடம்பெற்றமையால் அவர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே யூன் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த இறங்குதுறையானது பாசையூர் கடற்றொழிலாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டு அவுஸ்திரேலியாவின் நிதியில் ஐ.ஓ.எம் நிறுவனத்தினால் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது.

இதற்கான பணிகள் 59 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கடற்றொழிலை மேற்கொள்ளும் 700 குடும்பங்கள் நன்மையடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.