நேற்றிரவு 10.30 மணியளவில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்!

நேற்றிரவு 10.30 மணியளவில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமான மின்சார விநியோகமானது மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் மின்வெட்டின் விளைவாக சீர்குலைந்த நீர் விநியோகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து களனிதிஸ்ஸ மின் நிலையத்திற்கு மின்சாரம் அனுப்பும் கரவலப்பிட்டி மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்சார விநியோகம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு நாடு முழுவதும் மின்சார விநியோகமானது தடைப்பட்டது.

இது 2016 க்குப் பிறகு நாடு தழுவிய முதல் இருட்டடிப்பு ஆகும்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மின் உற்பத்தி மின் நிலையங்களிலும் நேற்று கோளாறு ஏற்பட்டிருந்தது.

பின்னர் இந்த கோளாறுகள் சீரமைக்கப்பட்டபோதிலும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பிரதான மின் இணைப்பின் பரிமாற்றத்தை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

விசையாழிகள் குளிர்ச்சியடையும் வரை மின் நிலையத்தை மீண்டும் இயக்க முடியாது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

இதேவளை மின்சக்தி அமைச்சர் டலாஸ் அழகாபெருமா, மின் தடை குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்க அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்தக் குழு இன்று காலை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுவுக்கு ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் அமைச்சர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Related Posts