நெடுந்தீவில் வீதியை ஆக்கிரமித்துள்ள கடற்படை!

நெடுந்தீவு மாவிலித்துறை பகுதியில் கடற்படையினர் முகாம் அமைப்பதற்காக வீதியை ஆக்கிரமித்துள்ளதாக நெடுந்தீவு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

north-naduntheve-delft

நெடுந்தீவு பிரதேச மக்களை சந்திப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர்களான இ.ஆனோல்ட், பா.கஜதீபன், அனந்தி சசிதரன், அ.பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம் கே.சயந்தன் உள்ளிட்ட குழுவினர், செவ்வாய்க்கிழமை (27) நெடுந்தீவு சென்றிருந்தனர்.

அக்குழுவினர் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் மக்கள் சந்திப்பொன்றினையும் நடத்தியிருந்தார்கள். அதன்போதே மக்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மக்கள் தொடர்ந்து கூறுகையில், எங்கள் காணிளை சுற்றி வேலி போடவோ அல்லது மதில் கட்டவோ அனுமதி பெற வேண்டும். வீதியில் இருந்து இவ்வளவு தூரம் விட வேண்டும் எனவும் கூறுகின்றார்கள்.

மாவிலித்துறை பகுதியில் கடற்படையினர் பாரிய கடற்படை முகாம் ஒன்றை அமைத்துள்ளார்கள். அதனை சுற்றி போடப்பட்ட கல்லுவேலி மற்றும் முட்கம்பி வேலி என்பன வீதியை ஆக்கிரமித்தே போடப்பட்டுள்ளது.

இரு வாகனங்கள் செல்ல கூடிய வீதி, முகாம் அருகால் செல்லும் போது மிக ஒடுங்கி ஒரு வாகனம் மட்டும் செல்லக்கூடிய வீதியாக காணப்படுகின்றது. அவ்வளவு தூரத்துக்கு அந்த வீதியை ஆக்கிரமித்துள்ளார்கள்.

குறித்த கடற்படை முகாம், பாரிய கட்டமாக கட்டப்பட்டுள்ளதால் புனித சவரியார் ஆலயம், குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவுத்தூபி மற்றும் பாடசாலை என்பனவற்றை முகாம் மறைத்துள்ளது.

நெடுந்தீவு கரையை அண்மிக்கும் போது எமக்கு புனித சவரியார் ஆலய முகப்பு தெரியும். அதனை வழிபட்டு ஆசீர்வாதம் பெற்றே நெடுந்தீவுக்குள் உட்புகுவோம். தற்போது அந்த ஆலய முகப்பு கடற்கரையில் நின்று பார்த்தால் தெரியாது. அதனை கடற்படை முகாம் மறைத்துள்ளது. இது எமக்கு மிகுந்த மன கஷ்டத்தை தருகின்றது.

குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவுத்தூபி கரையில் நின்று பார்த்தால் தற்போது தெரியாது. அதனையும் கடற்படை முகாம் மறைத்துள்ளது.

இந்த கடற்படை முகாமை அங்கிருந்து அகற்றுவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.