நெடுந்தீவில் கடற்படையினர் வசமிருந்த வீடுகள் கையளிப்பு

SL Navy logoநெடுந்தீவுப் பிரதேசத்தில் 7 வருடங்களாக கடற்படையினரின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் உரிமையாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்துக்கு அருகில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் கடற்படையினரின் பயன்பாட்டிலிருந்த 3 வீடுகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடபிராந்திய கடற்படை கட்டளை அதிகாரி, வீட்டு உரிமையாளர்களிடம் இந்த வீடுகளை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய இந்த வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலத்தில் கடற்படையினரின் வசமுள்ள ஏனைய வீடுகளும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி, நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் தானியேல் றெக்சியன், மதகுருமார்கள், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.