ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தின் குடிநீர் தாங்கியில் நஞ்சு கலந்த, 26 மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கண்டனப்பேரணி ஒன்று வெள்ளிக்கிழமை (20) சுன்னாகத்தில் நடைபெற்றது.
தூய நீருக்கான செயலணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கண்டனப் பேரணியானது, ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ முருகன் சனசமூக நிலைய முன்றலில் இருந்து ஆரம்பமாகி, புன்னாலைக்கட்டுவன் வீதி வழியாக சுன்னாகம் நகரை வந்தடைந்து, அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடமாகாண சபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கியின் நீரைப்பருகிய 26 மாணவர்கள் மயங்கி வீழ்ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். குறித்த தண்ணீர் தாங்கியினுள் நஞ்சு போத்தல் ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.