நிலையான சமாதானத்தை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் : சம்பந்தன்

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவற்கு பேதங்களை மறந்து அனைவரும் முன்வர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

”புனித ஹஜ் பெருநாளானது தன்னலமற்ற தியாகத்தை வலியுறுத்துகின்றது. விசுவாசம், தியானம், தேவையுள்ளோருக்கு உதவுவது, நோன்பு என்பவற்றோடு தியாகமானது இஸ்லாம் மார்க்கத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

எம் நாட்டில் புதிய அத்தியாயத்தை நோக்கிச் செல்கின்ற இத் தருணத்தில் நாம் அனைவரும் ஹஜ் பெருநாளின் தாற்பரியமான தியாகத்தை மனதில் கொண்டவர்களாய் நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முன்வரவேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor