நிலையான அபிவிருத்தி நிலையான அரசியற் சுதந்திரத்திலேயே சாத்தியமாகும் – பொ.ஐங்கரநேசன்

எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பதும், எமது மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புகின்ற நிலையான அபிவிருத்தி என்பதும் நிலையான அரசியற் சுதந்திரத்திலேயே சாத்தியமாகும் என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

01-2

இன்று யாழ்ப்பாணம் புறூடி ஒழுங்கையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது பணிகளைக் கையேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய இனிய தமிழ் உறவுகளே,

வடமாகாண சபையின் விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக என்பணியைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதே வேளையில் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளனாக என்னைத் தெரிவு செய்தமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அத்தெரிவில் பிரதான பங்குவகித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் எனது நண்பருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களுக்கும் அதிகப்படியான வாக்குகளை வழங்கி என்னை ஒரு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவுசெய்த தமிழ் மக்களுக்கும், அமைச்சுப் பணிகளை எனக்குப் பணித்த முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அமைச்சுப்பதவி மலர்தூவிய ஒரு சிம்மாசனம் அல்ல என்பதை நான் நன்கறிவேன். அபிவிருத்தி என்ற ஒரு பொய்மைத் தோற்றத்தைக்காட்டி எமது நிலவளம், நீர்வளம் என்பவற்றை அழித்து எமது செழுமை நிறைந்த மண்ணைச் சுடுகாடாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது குடியிருப்பு நிலங்களும், விவசாய பூமியும், செழிப்பான காடுகளும் வெவ்வேறு வகையான திட்டங்களாலும் சட்டங்களாலும் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் அமைச்சுப் பணிகளைப் பொறுப்பேற்றிருக்கும் எனக்கு, இப்பணிகளை முன்னெடுப்பது பெரும் நெருப்பாறை நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனினும் நீங்கள் எமக்குத் தந்திருக்கும் பேராதரவு ஒரு இமாலயப் பலம். அந்தப் பலத்தோடும், எமது உறுப்பினர்களின் தோள் கொடுப்போடும், தாயகத்திலும் தமிழகத்திலும் புகலிட நாடுகளிலும் வாழுகின்ற எமது துறைசார் உறவுகளின் சிந்தனை வீச்சோடும் எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுத்தவாறு எனக்குப் பணிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பதும், எமது மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புகின்ற நிலையான அபிவிருத்தி என்பதும் நிலையான அரசியற் சுதந்திரத்திலேயே சாத்தியமாகும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவன் நான். அந்த வகையில், இந்தப் பயணத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தேசியம், சூழலியம், சுயநிர்ணயம் என்ற உன்னதமான இலட்சியங்கள் இழையோடும். அவை, கடந்தகால அனுபவங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் மேலும் மேலும் புடம் போடப்பட்டுப் புதிய வீச்சுடன் முன்னெடுக்கப்படும் எனவும் உறுதி கூறுகிறேன்.

மாகாண அரசு தீட்டும் திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதும் அவற்றின் பயன்கள் முழுவினைத்திறனுடன் மக்களைச் சென்றடைவதும் அதிகாரிகளின் கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. மிக நீண்ட காலம் நேரடியாக அதிகாரிகளால் ஆளப்பெற்ற வடமாகாணம் இப்போது மாகாண அரசின் கீழ் வந்திருக்கும் நிலையில், நீதியான  நேர்மையான வெளிப்படையான நல்லாட்சியை நடத்துவதற்கு எங்களுடன் அரச அதிகாரிகள் சில்லும் அச்சாணியும் போல ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

01-1

01-3

01-4

01-5

01-6

01-7

தொடர்புடைய செய்தி

வடமாகாண அமைச்சர்கள் மூவர் இன்று பதவியேற்றனர்