நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

protest-arpaddam-stopஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

காணாமல் போனோரை கண்டறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டம், நாளை முற்பகல் 10 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்களை கண்டறிதல் தொடர்பாகவும், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளதும், புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளதும் விடுதலை தொடர்பாகவும், இராணுவம் மற்றும் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி சுவீகரிப்பு, சிங்கள – பௌத்தமயமாக்கல் தொடர்பாகவும் மற்றும் தமிழ் மக்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இன அழிப்புத் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் நவநீதம்பிள்ளை அம்மையாரின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவுமே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கவனயீரப்பு போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை வழங்குகின்றதுடன் காணாமல் போனவர்களது குடும்பங்கள், காணி சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளது குடும்பங்களை சார்ந்தவர்கள் உட்பட அனைத்துப் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்’ என்று த.தே.ம.மு.வின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.