நாளை முதல் வாழ்வாதார நிவராணக் கடன் வழங்கப்படும்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கான வாழ்வாதார நிவாரண கடன்திட்டம் (சஹண அருண கடன் திட்டம்) தேசிய ரீதியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்தார்.

Chandrasiri

இது தொடர்பாக அவர் கூறுகையில்.

இத்திட்டம் நாடு பூராகவுமுள்ள 1074 வாழ்வின் எழுச்சி சமுதாய மட்ட வங்கிகள் (சமுர்த்தி வங்கிகள்) மூலம் மக்கள் மத்தியில் செயற்படுத்தப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தில், ஒரு நாளில் 5000 ரூபாய் கடனும், 3 நாட்களில் 50 ஆயிரம் ரூபாய் கடனும் பெறமுடியும்.

இந்தக் கடனைப் பெறுவதற்கு பிணையாளிகள் தேவையற்றது என்பதுடன், முழுமையாக மக்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.

மேலும், இந்தத் திட்டத்தில் கடன்களைப் பெற்றவர்கள் முதல்வருடத்தில் எவ்வித மீளளிப்புப் தவணைப் பணமும் செலுத்தத் தேவையில்லை.

தொடர்ந்து இரண்டாவது வருடத்தில் இருந்து 4 வீத வட்டியின் அடிப்படையில் கடன் தவணைகளாக மீளச் செலுத்தப்படவேண்டும்.

யாழ் மாவட்டத்திலுள்ள 33 வாழ்வின் எழுச்சி சமுதாய மட்ட வங்கிகள் (சமுர்த்தி வங்கிகள்) இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன.

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பாக, வறியமக்கள் சரியான விளக்கத்தை இன்னும் தெரிந்திருக்கவில்லை.

அத்துடன், அம்மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக இன்னும் மாறவில்லை. அரசு முன்னெடுக்கின்ற திட்டங்களின் சரியான விடயங்களை வறிய மக்கள் உள்வாங்கி கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கம் என ஆளுநர் மேலும் கூறினார்.