இன்றைய தினம் நாட்டில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக ஸ்தம்பித்து இருந்த அலுவலகங்களில் இன்று வழமைப் போல் பணிகள் இடம்பெற்றன. நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரச திணைக்களங்கள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி எமது நிலையத்திற்கு தெரிவித்தார். இன்றை தினத்தில் இருந்து அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்குமெனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போக்குவரத்து சேவைகளும், தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன. இலங்கை போக்குவரத்துச்சபையின் பஸ் வண்டிகள், தனியார் பஸ் வண்டிகள் வழமை போல் பணிகளை ஆரம்பித்துள்ளன. இதேவேளை பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கான தபால் ரயில் இன்று இரவில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, தபால் ரயில் வழமையான சேவைகளை வழங்கி வருகின்றன. எனினும் திருகோணமலை, மட்டக்களப்பு, தபால் ரயில்கள் இன்று இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இன்று காலை அலுவலக ரயில்கள் உரியவாறு கடமையில் ஈடுபட்டுள்ளன. அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காலையில் இருந்து தூர இடங்களுக்கான ரயில் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டையில் வர்த்தக நிலையங்களும், வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சகல மொத்த விற்பனை நிலையங்களும் இன்று திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த சில தினங்களாக மொத்த விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தபோதும், தூரப் பிரதேச வியாபாரிகளின் வருகை குறைவடைந்திருந்தது. அத்தியாவசிய பொருட்கள் தேவையானளவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். புறக்கோட்டை, மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறி லொறிகள் வழமை போன்று பணிகளை ஆரம்பித்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர். போஞ்சி தவிர ஏனைய மரக்கறி வகைகளின் விலை சாதாரண அளவில் உள்ளதாக வர்த்தகர்கள், தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மரக்கறி வகைகள் அதிகளவில் கிடைத்துள்ளதாக அந்த நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் செயலாளர் வி.விஜயநந்த தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தைவிட இன்று மரக்கறிகளை கொள்வனவு செய்ய பல மாகாணங்களில் இருந்தும் வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.