நாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பின!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கடகிழமை) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை காலமும் பாடசாலைகளில் பகுதி பகுதியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் வழமை போன்று அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதிக்கப்படாது என்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பெற்ற பின்னர், அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் தங்கள் உணவை வீட்டிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அச்சமின்றி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜி.என்.சில்வா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.