தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகளில் நீங்கள் எவ்வாறு குடியேறினீர்கள்? யாருடைய அனுமதியைப் பெற்று இங்கு நீங்கள் வீடமைக்கிறீர்கள்? உங்களுக்கு முன்னர் எங்கு காணி இருந்ததோ அங்கு செல்ல வேண்டியது தானே, ஏன் இங்கு இருக்கிறீர்கள்?
நாவற்குழியில் தங்கியுள்ள சிங்கள மக்களைப் பார்த்து இப்படிக் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
நாவற்குழியில் உள்ள வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் தங்கியுள்ள தமிழ்க் குடும்பங்களைச் சந்திப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று அங்கு சென்றிருந்தார்.
அதன்போது சிங்கள மக்கள் தங்கியுள்ள பகுதியை சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சென்ற குழுவினர் படம் எடுத்துள்ளனர். அதையடுத்து அங்கு வந்த சிங்கள மக்கள் தம்மைப் படம் எடுக்க வேண்டாம் என்று கடும்தொனியில் தெரிவித்தனர்.
ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அந்த மக்களைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து சிங்கள மக்கள் அவருடன் முரண்படத் தொடங்கினர்.
இந்தக் காணியில் தமிழ் மக்கள் முன்னர் வாழ்ந்தனர். இங்குள்ள தென்னை மரங்களைப் பார்க்கும் போது அது தெரியவில்லையா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் சிங்கள மக்களைக் கேட்க, நாங்கள் இங்கு வரும்போது யாரும் இருக்கவில்லை என்று அவர்கள் பதிலளித்தனர்.
அவர்கள் இங்கிருந்து வெளியேறி இருக்கலாம். இது அவர்களுடைய காணி என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கும்போதே, இது அரச காணிதானே, அதுதான் நாங்கள் இங்கு குடியிருக்கின்றோம் என்று சிங்கள் மக்கள் பதில் கூறினர்.
இந்தக் காணி உங்களுக்குத் தரப்பட்டுவிட்டதா? என நாடாளுமன்ற உறுப்பினர் அந்த மக்களிடம் கேட்க, அதற்கு அந்த மக்கள் இல்லை எனப் பதில் கூறினர். அப்படியானால் இங்கு எப்படி நிரந்தர வீடுகள் அமைத்தீர்கள்? யாருடைய அனுமதியைப் பெற்றுள்ளீர்கள்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கள மக்களிடம் கேட்டார்.
எங்களுடைய பிக்குகள் தான் உதவினார்கள். நாங்கள் முன்னர் மணியந்தோட்டத்தில் வாழ்ந்தோம் என அவர்கள் பதிலளித்தனர். அப்படியானால் இங்கு ஏன் இருக்கிறீர்கள். மணியந்தோட்டத்துக்குச் செல்ல வேண்டியதுதானே என்று சுரேஷ் கூறினார்.
சிங்கள மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தபோது அங்கு படையினர் வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஏன் வந்தீர்கள் என்று கேட்க, மக்களைப் பார்க்க வந்தேன் என்று பதிலளித்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்களைச் சென்று பார்வையிட்டார்.
அதன்போது தமிழ் மக்களுக்குக் குடிதண்ணீர் வசதிகளை உடனடியாகப் பிரதேச சபை மூலம் ஒழுங்கு செய்து தருவதாகவும், பொதுக்கிணறு, வாசிகசாலை என்பவற்றைப் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் அமைத்துத் தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்குள்ள தமிழ் மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
அத்துடன் அந்தப் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்களை நாளை மறுதினம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.