நவுரு முகாம் துஷ்பிரயோகம் பற்றி விசாரணை

நவுரு தீவிலுள்ள தடுப்பு முகாமில் புகலிடக் கோரிக்கையாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாரிக்கவுள்ளது.முகாமின் பணியாளர்கள் பெண்களையும், பிள்ளைகளையும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாகவும், பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

scott_morrison

இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார். குறித்த சம்பவங்கள் நற்பணியாளர்களின் கற்பனையா அல்லது அவர்கள் உண்மையாகவே புகலிடக் கோரிக்கையாளர்களை தற்கொலைக்குத் தூண்டினார்களா என்பது பற்றியும் விசாரிக்கப்படுமென அமைச்சர் கூறினார்.

பசுமைக் கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் சாரா ஹான்சன் யங் கடந்த வாரம் நவுரு தீவு தடுப்பு முகாம் பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இங்குள்ள பெண்கள் குளியல் அறையை நாட வேண்டுமானால் காவற்பணியாளர்களின் இச்சையைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதாக அவர் கூறினார்.

முகாமில் உள்ள சிறுவர்கள் காவலாளிகள் முன்னிலையில் பாலியல் செயல்களை செய்து காட்ட வேண்டுமென வற்புறுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாகவும் சாரா அம்மையார் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி

நவுரு முகாமில் இடம் பெறும் கொடுமைகள்