நல்லூர் பிரதேச சபையின் தலைவர் எஸ்.வசந்தகுமார் மீது சற்று முன்னர் இனம்தெரியாத நபர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் அவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் பிரதேச சபைக்குச் சொந்தமான நிலத்தை படையினர் ஆக்கிரமித்துள்ள சம்பவம் தொடர்பில் மேல்நீதிமன்றில் நாளை வழக்குத் தொடர்வதற்காக அவர் ஆவணங்களை பரிசீலனை செய்ய எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்போது இவரை பின்தொடர்ந்து வந்த இனம்தெரியாத நபர்கள் கொக்குவில் அம்பட்டப் பாலம் பகுதியில் வழிமறித்து இரும்பு சட்டங்களால் தாக்கியுள்ளதுடன், மோட்டார் சைகிளிலிருந்து உதைத்து கீழே தள்ளி தொடர்ந்து தாக்குதல் நடத்தவும் முயன்றுள்ளனர்.
எனினும் அதற்குள் அப்பகுதியில் வீடுகளிலிருந்த இளைஞர்கள் அலறும் சத்தம் கேட்டு அப்பகுதியில் கூடியுள்ளனர்.இதனையடுத்து அந்த இளைஞர்களை அச்சுறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நிலத்தை ஆக்கிரமிக்கும் சம்பவங்கள் தொடர்பில் வாய் திறக்க முடியாத அராஜகத் தன்மை மீண்டும் ஒரு தடவை யாழில் நிருபணமாகியிருக்கின்றது.மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் பிரதேச சபை தலைவரிடமிருந்த ஒரு தொகுதி ஆவணங்களும், ஒரு தொகுதி பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.