பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாடு

missing personநல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்

யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.

இவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.நல்லூர் பண்டாரிக்குளப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுரேஸ் சத்தியபாலன் என்பவரே நேற்று வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாக இவரது சிறியதாயாரினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் ஒரு வருடமாக சிறியதாயாருடன் வசித்து வந்துள்ளதாகவும் நேற்று வியாழக்கிழமை காலையில் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 46 இலட்சம் ரூபா மோசடி செய்த நபருக்கு வலைவீச்சு

வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட யாழ்.வங்கி ஊழியர் ஒருவரரை தேடி வருவதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கனடாவுக்கு அனுப்பி வைக்கதாகக் கூறி 46 லட்சத்து 8550 ஆயிரம் ரூபாவை வாங்கி, பணமோசடியில் ஈடுபட்ட வங்கி ஒன்றின் ஊழியரைத் தேடிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வங்கி ஊழியர் வங்கியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக பொலிஸ் புலன் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறிய வங்கி ஊழியரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் முதியவர் கொலை! தங்க ஆபரணங்கள் மீட்பு – இருவர் கைது

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்

யாழில் தனிமையில் இருந்த 69 வயதுடைய முதியவரைக் கொலை செய்து, அவரிடமிருந்த 13 பவுண் நிறையுடைய 5 லட்சத்து 46 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பலன் விசாரணைகளின் போது பொலிகண்டியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரும் ஊரணி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.