நலன்புரி நிலைய மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்: ஈ.பி.டி.பி.

EPDP flagயாழ். குடாநாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்படும் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘வலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்களாகக் காணப்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொண்டுவந்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தான் தொடர்ந்து மேற்கொள்வதாகவும் கடந்த வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நடைபெறமாலிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீண்டும் அமைச்சரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.