நல்லூர் பிரதேச சபையின் கோண்டாவில் மேற்கு நந்தாவில் பிரதேசத்தின் குளத்திற்கு அருகில் காணப்படும் கள்ளுத் தவறணை தொடர்பாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பில் தெரிய வருவது,
இந்தப் பிரதேசத்தில் குடிபோதையில் வருவோரின் அநாகரிகமான செயற்பாடுகள் மற்றும் தவறானவார்த்தை பிரயோகங்கள் மற்றும் பொதுமக்கள் காரணமின்றி தாக்கப்படுதல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் இங்கு மது அருந்துவதால் அவர்கள் மது பாவனை மற்றும் போதைவஸ்து பாவனைக்கு அடிமையாவதற்கு இக்கள்ளுத்தவறணை காரணமாக அமைவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் நிரந்தர பாதையற்ற காணிக்குள் இக்கள்ளுத்தவறணை அமைக்கப்பட்டிருப்பதுடன் அருகில் உள்ள காணிகளில் வசிக்கும் மக்கள் அச்சப்படும் அளவிற்கு களவுகள், மக்கள் தாக்கப்படுதல் ஆகியன சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கின்றன.
மேலும் இது தொடர்பாக கோண்டாவில் மேற்கு கிராம அலுவலரிடமும் பல தடவைகள் முறைப்பாடு செய்ததாக மக்கள் தெரிவித்தனர்.எனினும் இது தொடர்பாக கோண்டாவில் மேற்கு கிராமஅலுவலரிடம் கேட்டபோது இந்த விடயம் பற்றி எதுவித கருத்தும் தெரிவிக்க தான் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது பற்றி நல்லூர் பிரதேச சபை தவிசாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது ,
இப்பிரச்சனை தொடர்பாக ஒரு வருடத்துக்கு முன்பு மக்களால் எழுத்து மூலம் தரப்பட்டது.அதனை கருத்திற் கொண்டு ஆராய்ந்து தீர்வும் எட்டப்பட்டது.மக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் கள்ளுத் தவறணைக்கு சென்று வரவேண்டும் என்று தெரிவிக்கப்ப்பட்டது.
இதற்கு கள்ளுத் தவறணை ஊழியர் தான் பொறுப்பு என்று கூறினார்.அதன் பின் இவ்வாறான பிரச்சினை பற்றி யாரும் எமக்கு தெரியப்படுத்தவில்லை தற்போது இவ்வாறான பிரச்சினை எழுந்துள்ளது எமக்கு கவலையளிக்கின்றது என தெரிவித்தார்.
இதேவேளை இந்த தவறணையை நம்பி பல சீவல் தொழிலாளிகளின் குடும்பங்களும் உள்ளது. அதனால் அதை மூடிவிட முடியாது. இருந்த போதிலும் இது மக்கள் பிரச்சினை என்பதால் இதை உடனடியாக ஆராய்ந்து இதற்கு விரைவில் ஒரு சுமூகமான தீர்வு காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.