நகுலேஸ்வரத்தில் கடற்படை முகாம் நிர்மாணிக்க 183 ஏக்கர் காணி அளவீடு – கஜதீபன்

p-kajatheepanகீரிமலை, நகுலேஸ்வரம், ஜே – 226 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியைச் சேர்ந்த 183 ஏக்கர் காணி, பொலிஸாரின் துணையுடன் நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (14) அளவீடு செய்யப்பட்டுள்ளது என வட மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

35இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குச் சொந்தமான இந்தக் காணி, கடற்படை முகாம் அமைப்பதற்கு சுவீகரிக்கும் நோக்கிலே அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் பொலிஸாரின் பாதுகாப்புடன் நிலஅளவைத் திணைக்களத்தினர் சென்றதாகவும், அங்கு காணிகள் அளவீடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தனக்கு தகவல் கிடைத்ததாக கஜதீபன் தெரிவித்தார்.

இதேவேளை, கீரிமலை, சேந்தான்குளம் மற்றும் திருவடிநிலை ஆகிய பகுதிகளில் 127 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (14) மூன்றாவது தடவையாக காணி அளவிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருந்தன.

இது தொடர்பில் அறிந்த வடமாகாண, பிரதேச, நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அவ்விடத்திற்குச் சென்று காணிகளை அளவீடு செய்யவிடாமல் போராட்டம் மேற்கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் காணி அளவீடும் நடவடிக்கைகள் மூன்றாவது தடவையான இன்று திங்கட்கிழமையும் (14) கைவிடப்பட்டது.

இந்நிலையிலேயே, மேற்படி காணிகளுக்கு அப்பால் கீரிமலை, நகுலேஸ்வரம் ஜே – 226 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 183 ஏக்கர் காணிகள் நிலஅளவைத் திணைக்களத்தினரால் பொலிஸாரின் உதவியுடன் அளவீடு செய்யப்பட்டதாக கஜதீபன் தெரிவித்தார்.

எனினும், இதனை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் கடற்படையினரிடமிருந்தோ அல்லது பொலிஸாரிடமிருந்தோ தகவல்கள் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

127 ஏக்கர் காணிகள் அளவீடு செய்யப்படுவதை தடுக்கச் சென்ற மக்கள், 183 ஏக்கர் காணிகள் அளவீடு செய்வதைத் தடுக்க முடியாமல் திரும்பிச் சென்றதாக வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும் வலி.வடக்குப் பிரதேச சபை உப தவிசாளருமான சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார்.