த.தே.கூ தொடர்பில் சிங்கள மக்களை குழப்பவும் நாட்டில் பலர் உள்ளனர்; விக்னேஸ்வரன்

vicknewaran-tnaவடமாகாணசபையுடன் இணைந்து செயற்பட தயார் என அமைச்சர் பசில் கூறியிருந்த கூற்றில் நம்பிக்கை உள்ளது எனினும் விமல் போன்றவர்களது கருத்துக்களையும் ஜனாதிபதி கேட்பாரோ என்ற ஐயப்பாடும் எம்மிடம் உண்டு என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற வேளை புதிதாக அமைய இருக்கின்ற வடக்கு மாகாணத்துடன் அரசாங்கம் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக பசில் தெரிவித்திருந்தார். எனவே அவருடைய கருத்தை வரவேற்பதுடன் அரவது பேச்சிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ஆனாலும் பசில் கூறியவை ஒருபுறம் இருக்க விமல் வீரவன்ச போன்றவர்கள் வெவ்வேறு பேச்சுக்களை பேசுகின்றார்கள். சில நேரங்களில் அவர்களின் கருத்துக்களுக்கு ஜனாதிபதி செவி சாய்ப்பதால் கூறுகின்ற உறுதி மொழிகளுக்கு மாறாக வேறு எதனையும் செய்யக்கூடும் என்ற பயமும் உள்ளது.

கட்டாயமாக பசில் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. இருப்பினும் சிங்கள மக்களை குழப்புவதற்கு இனத்துவேஷத்துடன் செயல்படுவதற்கும் சிலர் நாட்டில் இருக்கின்றார்கள்.

எனவே ஜனாதிபதி ஏதாவது பிரச்சினைக்கு உட்பட்டு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்றும் தெரியாது. நாங்கள் இவற்றை அனுபவத்தில் நன்றாக படித்துள்ளோம்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் ஓர் உடன்படிக்கை வைத்த போது எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கின்றது என்று நாம் எதிர்பார்த்திருந்தோம் ஆனால் 200 பௌத்த பிக்குகள் அவரது வீட்டிற்குச் சென்று பல எதிர்ப்பு வார்த்தைகளை கூறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டார்.

அதுபோல டட்லி சேனாநாயக்கவுடனும் அவ்வாறு தான் இடம்பெற்றது. இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தலைவர்கள் சில நல்ல காரியங்கள் செய்யும் போது அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளே இடம்பெற்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.