தொண்டர்களின் 11 நாட்கள் போராட்டம் கைவிடப்பட்டது

யாழ்.போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் வழமைபோல் தாம் பணிக்குத் திரும்புவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

DSCF9030

யாழ்.போதனா வைத்தியசாலை தற்காலிக தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி கடந்த 13 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ;கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்து முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மேற்படி தொண்டர்களைச் சந்தித்த பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா,தொண்டர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொண்டர்களுடனும், வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜாவுடனும் கலந்துரையாடினார்.

இதன்போது, தொண்டர்களில் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையில் சித்தி பெற்ற 168 பேருக்கு முதலில் உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குவதாகவும், மிகுதிபேர் 2 வருடங்களுக்குள் கல்விப் பொதுத்தராத சாதாரண தரப்பரீட்சையில் தோற்றி அதன் சான்றிதழினை வழங்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இருந்தும் தொண்டர்கள் இதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன், மிகுதிப் பேர் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவது என்பது சாத்தியமற்றது என்றும் அவர்களுக்கு அமைய (நாளாந்த கூலி) அடிப்படையில் பணியாளர்களாக இணைக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசித்து எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் இந்த கோரிக்கை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலன்கருதி உங்களுடைய போராட்டத்தினை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்தே 11 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் கைவிடப்பட்டது.