தேவையின் அடிப்படையில் சேவை செய்ய வேண்டும் – டக்ளஸ்

மனிதனின் தேவைகளை உணர்ந்து அந்த தேவைகளின் அடிப்படையில் சேவை செய்ய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

0ad2

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்று புதன்கிழமை (9) இடம்பெற்ற யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு படைப்பிரிவின் பணியாளர்களுக்கு நியமனப் பத்திரங்களை வழங்கி வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஆபத்து, விபத்து என்பவை திட்டமிட்டு வருவதில்லை. அதில் ஒன்றுதான் தீயினால் ஏற்படக்கூடிய விபத்தும், ஆபத்துமாகும். எனவே, இவ்வாறு தீவிபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் காலநேரம் பார்க்காது அர்ப்பணிப்புடன் இந்த சேவையை உணர்ந்து கொண்டவர்களாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

தொழிலுக்கு விசுவசமாகவும், உண்மையாகவும் இருக்கும் அதேவேளை, உயரதிகாரிகளுக்கு கீழ்படிந்து நடந்துகொள்ள வேண்டுமென்பதுடன் சக ஊழியர்களுக்கும் மதிப்பளிக்கவும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமன்றி செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு இணங்க கிடைக்கப் பெற்றுள்ள இந்த வாய்ப்பின் ஊடாக நீங்களும் நீங்கள் சார்ந்து வாழும் உங்கள் உறவுகளும் சமூகமும் முன்னேற்றம் காண வேண்டுமென்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நியமனப் பத்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர ஆணையாளர் பிரணவநாதன் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர்.

இன்றைய தினம் மாநகர சபையின் தீயணைப்பு படைப்பிரிவுக்கென 18 பேருக்கான நியமனப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வடமாகாணத்தில் முதன்முறையாக தீயணைப்பு பிரிவுக்கென ஆளணி உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.