தேசிய கீதம் தமிழில் பாடுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விரும்புகின்றார் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஸ்ணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 06 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திங்கட்கிழமை (23) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘இங்கு தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. இதுவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பம் ஆகும்.
மேலும், கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு வகையான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் என்னாலான முழு ஆதரவையும் உதவியையும் இங்குள்ள பாடசாலைகைளுக்கு வழங்குவதுடன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து உதவி செய்வதற்கும் தயாராகவுள்ளேன்’ என்றார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சி.யோகேஸ்வரன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.