தேசிய கல்வியியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு 20ம் திகதி ஆசிரியர் நியமனம்?

Job_Logoதேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு இம்மாதம் 20ம் திகதி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சியை நிறைவுசெய்து 2012ம் ஆண்டு வெளியேறிய ஆசிரியர்களுக்கே இந்நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் தாமதமாகும் இவர்களின் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந் நியமனம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இவர்களுக்கான ஆசிரிய நியமனங்களை வழங்குவதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள ஆசிரிய பற்றாக்குறை ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்படுமென்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஆசிரிய கலாசாலைகளில் பயிற்சிகளை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாகவும் கல்வி அமைச்சிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எடுத்துரைத்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்படுமென்றும் குறிப்பிட்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்,

தொலைக்கல்விக்கூடாக பயிற்சிகளை மேற்கொண்டு பின்னர் ஆசிரிய கலாசாலைகளில் இணைக்கப்பட்ட ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் தொகுப்பாக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்தினாலேயே நியமனங்களின் போது தாமதம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் ஆசிரிய உதவியாளர்களாக இருந்து ஆசிரிய பயிற்சியினை நிறைவு செய்த ஆசிரியர்களின் வேதன மாற்றத்திற்காக விரைவாக பெறுபேற்றினை வெளியிட்டு அவர்கள் நிரந்தர ஆசிரிய வகுதிக்குள் உள்வாங்கப்படுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சரா. புவனேஸ்வரன்,

அதிபர் சேவைத்தரம் இரண்டில் நீண்டகாலம் கடமையாற்றி அதிபர் சேவைத்தரம் ஒன்று கிடைக்கப் பெறாத அதிபர்களின் நியமனம் தொடர்பாக பல தடவைகள் கல்வி அமைச்சிடம் எடுத்துக் கூறியதன் பயனாக அவர்களுக்கான நேர்முகத் தேர்வு இப்பொழுது கல்வி அமைச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அவை நிறைவடைந்ததும் பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறையும் நீக்கப்படும் எனவும் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.