தேசியக் கொடியில் சிங்கத்தை அகற்றி சிறுத்தையை இணையுங்கள் – ஐங்கரநேசன்

P-Inkaranesanநாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் சிங்கள அரசு முதலில் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தை தூக்கி எறிந்து விட்டுச் சிறுத்தைப் புலியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சூழலியலாளரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

புத்தூரில் நேற்று மாலை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எங்கள் ஆயுதங்களைப் பறித்து தோற்கடித்த அரசு இப்போது வாக்கு ஆயுதத்தையும் அபிவிருத்தியைக் காட்டி எம்மைத் தோற்கடிக்கப் பார்க்கின்றது.

இன்று இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வீதிப் புனரமைப்பு, கட்டடங்களும் அபிவிருத்தியா? இங்கு அபிவிருத்தி நடந்திருக்கு மானால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும். அவ்வாறு உயர்ந்திருந்தால் அந்த மக்கள் உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியா செல்லமாட்டார்கள்.

இலங்கையில் ஒருபோதும் சிங்கம் இருந்ததில்லை. சிங்கள மக்கள் புராதன இதிகாச அடிப்படையில் சிங்கத்தைத் தமது தேசியக் கொடியில் அதுவும் வாளேந்திய சிங்கத்தைப் புகுத்தியுள்ளார்கள்.

அப்படியானால் எவ்வாறு இந்த மண்ணில் ஒற்றுமை சாத்தியப்படும். நாங்கள் தமிழர்களும் ஒரு தேசிய இனம். எனவே வடக்கு கிழக்கில் ஏன் தென் திசையிலும் காணப்படுகின்ற சிறுத்தைப் புலியை தேசிய சின்னமாக தேசியக் கொடியில் இணைப்பதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.