தென்பகுதி குடும்பஸ்தர் கொலை; யாழில் தம்பதியர் கைது

arrest_1தென்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை அடித்துக் கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியரை கைது செய்ததாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு எல்.விக்கிரமாரச்சி தெரிவித்தார்.

விழுந்து காயங்களுக்குள்ளாகியதாக கூறி யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குருநாகல் பகுதியைச் சேர்ந்த அப்புஹாமி நிஷாந்த (வயது 42) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரின் உடற் கூற்று பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி, குறித்த நபரின் கையில் வெட்டுக் காயங்களும், தலையில் அடிகாயம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தெரிவித்தார்.

இந்நிலையில், இவர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கான நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் வேலை செய்து வருகின்றார் என்றும், கொழும்புத்துறை பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குறித்த நபர் கொலை செய்யும் நோக்கத்துடனேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் தங்கியிருந்த நண்பனின் தாயார் மற்றும் தந்தையாரிடம் விசாரணை மேற்கொண்டதை அடுத்து அவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

கணவன் மனைவி இருவரையும் விசாரணை மேற்கொண்ட பின்னர் இன்று திங்கட்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.