தென்னிலங்கை மக்களுக்கு அனுமதி உண்டு என்றால் எமக்கு ஏன் இல்லை? – மயிலிட்டி மக்கள்

thellipplai_poraddam_02தென்னிலங்கை மக்களுக்கு அனுமதி உண்டு என்றால் எமக்கு ஏன் இல்லை? தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை எங்கள் பிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கும் இராணுவம் எங்களை எங்கள் பிரதேசங்களில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி அளிப்பதில்லை. ஏன் இந்த பாரபட்ச நிலை’ என மயிலிட்டி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு உட்பட்ட மயிலிட்டியில் உள்ள மூன்று இந்து ஆலயங்களில் வழிபாடுகளுக்காக சென்ற மக்களுக்கு இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்தே அம்மக்கள் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘நாங்கள் பூர்விகமாக வாழ்ந்து வந்த எங்கள் மண்ணிற்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா வருபவர்கள் நினைத்தவாறு எங்கள் பகுதிக்குச் சென்று கடலில் குளித்தும் தங்கள் பொழுதுபோக்கை கழித்தும் வருகின்றனர்.

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் அங்கு செல்ல முடியும் என்றால் ஏன் எங்கள் பகுதிக்கு நாங்கள் செல்ல முடியாது? ஏன் இந்த பாரபட்சமான முறை? இந்த நிலை என்று மாறும்’ என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மயிலிட்டியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை காலை சென்ற மக்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மயிலிட்டியில் உள்ள முருகன் ஆலயம், பிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகி அம்மன் ஆலயம் என்பவற்றுக்கு தரிசனத்திற்காக சென்ற மக்களுக்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு உட்பட்ட மயிலிட்டியில் மேற்படி 3 ஆலயங்களும் காணப்படுவதால் இங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்றைய தினம் குறித்த பகுதியில் நடைபெறவுள்ள ஆலய வழிபாடொன்றிற்கு செல்ல அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் மயிலிட்டி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதிக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா கடந்தவாரம் அறிவித்திருந்தார்.

இவ் அறிவித்தலை தொடர்ந்து 20 பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களில் 1500 இற்கும் மேற்பட்ட மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக மயிலிட்டிக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு வழிபாடுகளுக்கு சென்றவர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மயிலிட்டி முருகன் ஆலய தர்மகரத்தா வடிவேல்கரசன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து தம்மை ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு மக்கள் இராணுவத்தினரிடம் கோர 200 பேரை மட்டும் அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

அதற்கு உடன்படாத மக்கள் நண்பகல் மட்டும் அவ்விடத்தில் இருந்து விட்டு பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.